Astrotimers.com
MATRIMONIAL AND ASTROLOGICAL SERVICES
Free Matrimonial Service for All Communities
இல்லறமே நல்லறம்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

வராஹ மிஹிரர்

மனிதன் கதைகளைக் கேட்டே வளர்ந்து வந்தான். ஆய கலைகள் அறுபத்தி நான்கில் ஒன்றான ஜோதிடமும் இதற்கு விதி விலக்கல்ல. கற்பனை வளம் மிகுந்த கதைகள் மூலமாக ஜோதிடத்தின் பெருமையை எடுத்துக் கூறிய நம் ஜோதிட ஆசான்கள் அனைவருக்கும் இக்கக்கதைகள் சமர்ப்பணம்!

மிஹிரர் வராஹ மிஹிரர் ஆனகதை தெரியுமா?

உஜ்ஜெனியியை ஆண்ட விக்கிரமாதித்தன் மன்னர் அரசவையில் நவமணிகள் என்று போற்றப்படும் பல சாஸ்திர மேதைகள் இருந்தனர். அவற்றுள் மிஹிரரரும் ஒருவர். பிருஹத் ஜாதகம் என்னும் நூலை ஜோதிட உலகிற்குத் தந்தவர் அவரே. மன்னர் ஆட்சி சிறப்பாக நடைபெற, ஜோதிடர் என்கிற ரீதியில், நல்ல நாள் மற்றும் நேரம் பார்த்தல், அரசருக்கு அவ்வப்போது தேவையான ஜோதிட ஆலோசனை வழங்குதல் என்ற பணியை மிஹிரர் குறைவின்றி செய்து வந்தார்.

காலக் கிரமத்தில், மன்னனுக்கு ஆண் மகவொன்று பிறந்தது. அரச வாரிசல்லவா? தான தருமங்கள் எல்லாம் செய்த பின், ஜோதிடர்கள் போட்டிபோட்டுக் கொண்டு பலன்களைக் கணித்தனர். அதில் மிஹிரரும் பங்கு கொண்டார். எல்லா ஜோதிடர்களும் சொன்ன பலனைக் கேட்டு, மன்னன் வருத்தமடைந்தான். ஏன் தெரியுமா? அரச குமாரனுக்கு 18 வயதில், கண்டம் ஒன்று ஏற்படும். அதிலிருந்து மீள்வது கடினம் என்று கூறியதுதான் காரணம்! மன்னன் ஜோதிடர்களிடம் எந்த மாதிரியான கண்டம் ஏற்படும் என்று கேட்டதற்கு இதர ஜோதிடர்கள், "காட்டு மிருகத்தால், பேராபத்து ஏற்படலாம். எனவே தக்க வயது வந்தவுடன் இளவரசரை வேட்டைக்கு அனுப்பாமலிருப்பது நல்லது" என்று கூறினர். மன்னன் மிஹிரரிடமும் அதைப் பற்றிக் கேட்டான். மிஹிரர் இன்னும் ஒரு படி மேலே போய், "மன்னரே! இளவரசர் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பது என் ஆசைதான்.ஆனால், அரச சின்னமான வராஹமே இளவரசனின் உயிரைக் குடிக்கும் என்பதை வருத்தத்தோடு சொல்லிக் கொள்கிறேன்" என்றார். மன்னன் நீண்டசோகப் பெருமூச்சு ஒன்றை விட்டான்.

காலம் உருண்டோடியது. அரசகுமாரன் 18 வயதை அடைந்தான். மன்னரும், மற்றவரும் அவனைக் கண் போலக் காத்து வந்தனர். கட்டுக்காவலும் அதிகரித்தது. கண் இமைக்காமல் காக்கும் காவலரைத் தாண்டி எதுவும் உள்ளே நுழைய முடியாது. அரசனுக்கு ஓரளவு நிம்மதி இருந்தாலும் உள்ளூர, கவலை மனதை அரித்துக் கொண்டே இருந்தது. மிஹிரர் குறிப்பிட்ட நாளும் வந்தது. அனைவரும் அரண்மனையில் கூடி விட்டனர். அரச குமாரன் உப்பரிகையில் தன் தோழர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான் என்ற செய்தி வந்தது. மன்னன் வராஹரை பார்த்து, "என்ன வாராஹரே, என்ன சொல்கிறீர்? இன்னுமா வராஹம் வந்து அரசகுமாரனுக்கு தீங்கிழைக்க முடியும்?" என்றான். வராஹர், "கட்டுக்காவல், கட்டுப்பாடு அனைத்தையும் மீறி விதி வேலை செய்யும். அதில் சந்தேகமில்லை" என்றார்.

"ம், பார்ப்போம்" என்றான் மன்னன்.

அவ்வப்போது காவலர்கள் உப்பரிகையில் அரச குமாரன் நலமாக இருக்கும் செய்தியை சொல்லிக் கொண்டிருந்தனர். மன்னன் வராஹரை நோக்கி," வாரும் மிஹிரரே. நீங்கள் கொடுத்த காலக் கெடு முடிந்து விட்டது. நாம் இருவரும் போய் அரசகுமாரனைப் பார்த்து வருவோம்" என்றான். இருவரும் உப்பரிகைக்கு சென்றனர். அரசகுமாரனின் தோழர்கள் அனைவரும் விளையாடியதால் களைப்படைந்து, அமர்ந்து கொண்டிருந்தனர். "அரசகுமாரன் எங்கே? இப்பொழுதுதான் காற்று வாங்க மேல் உப்பரிகைக்கு சென்றுள்ளார்" என்ற பதில் கிடைத்தது .

மன்னன் விறுவிறுவென்று மேல் உப்பரிகைக்கு சென்றான். மன்னன் அங்கு கண்ட காட்சி அவனை நிலை குலைய வைத்து விட்டது. இளவரசன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான். அது மட்டுமா? காட்டுப்பன்றி (வராஹம்) ஒன்று அவன் மார்பில் ரத்தக் கறையுடன் அழுந்திக் கிடந்தது.

வராஹம் அங்கு எப்படி வந்தது? மேல் உப்பரிகையின் மீது, உலோகத்தால் ஆன கொடிக்கம்பம் ஒன்று அரசு சின்னமான வராஹத்துடன் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. பலமான காற்றில் கொடிக்கம்பம் ஒடிந்து விழ, அந்த கனத்த உலோக வராஹம் அரசகுமாரன் மார்பில் விழுந்து அவன் உயிரைப் பறித்து விட்டது. மன்னன் கதறி அழுதான்.

மிஹிரர் தேற்றினார் மன்னனை." மிஹிரரே விதியின் வலிமையை உணர்ந்தேன். மகனை இழந்தது சோகம்தான். ஆனால் அதனை கணக்கிட்டுச் சொன்ன உன் ஜோதிடப்புலமையை பாராட்டியே ஆக வேண்டும். இன்று முதல் நீர் வராஹமிஹிரர். சோகச் சூழ்நிலை இல்லாவிடில் உம்மை எப்படிப் பாராட்டியிருப்பேன் என்று தெரியுமா?அதுவும் உம் விதியே" என்றான் மன்னன்.

FATE WILL ALWAYS FIND A WAY TO CARRY ON ITS SHOW!

ஜோதிடர். திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்.

KNOW ABOUT ASTRO-GAYATHRI

SERVICES OF ASTRO-GAYATHRI


Astrological predictions, Horoscope casting and matching for matrimony, NEWS and articles on Astrology

Designed and maintained by AKR Consultants