Astrotimers.com
MATRIMONIAL AND ASTROLOGICAL SERVICES
Free Matrimonial Service for All Communities
இல்லறமே நல்லறம்
வாழ்க்கை வாழ்வதற்கே! வாழு வாழவிடு

சூரியனுக்கு ஏன் சர்க்கரைப் பொங்கல்?

இன்பத்தை அனுபவிக்கும் மனிதன் துன்பப்படும் போது, ஜோதிடரை அணுகி துன்பத்தைக் குறைத்துக் கொள்வதற்கான வழிகளை அறிந்து கொண்டு அதன் படி நவக்கிரகங்களை வழிபடுவது என்பது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

நவக்கிரக நாயகனான சூரியனின் அருளைப் பெற, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யுமாறு கூறுவார்கள். சூரியனுக்கு ஏன் சர்க்கரைப் பொங்கல்? அது ஒரு சுவாரஸ்யமான கதை!

தக்ஷப் பிரஜாதிபதி தன் மகள் தாட்சாயிணீயை ஈசனுக்கு மணம் முடித்துக் கொடுத்திருந்ததால், பரமேஸ்வரனை தன் மருமகனாக அடைந்துள்ளோம் என மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தான். ஒரு சமயம் தக்ஷன் கைலாயம் சென்றிருந்தான். தேவாதி தேவர்களும், பிரமன், விஷ்ணு போன்றோர்களும் ஈசனைத் தரிசிக்க வந்திருந்தனர். மாமன் என்ற முறையில் ஈசன் அங்கு தன்னை விசேஷமாகக் கவனிப்பார் என்று எண்ணினான். ஆனால் அங்கு அவ்வாறு நடக்கவில்லை என்பதால், தக்ஷன் பெரும் கோபம் கொண்டதுடன், ஈசன் தன்னை தேவர்களுக்கு நடுவே அவமதித்து விட்டதாக எண்ணிக் குமுறினான்.

தன்னை அவமதித்த ஈசனைப் பழிக்குப்பழி வாங்க எண்ணம் கொண்டான் தக்ஷன். உடனே பெரிய யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்தான். சிவனைத் தவிர, அனைவருக்கும் யாகத்திற்கான அழைப்பை விடுத்தான். அனைவரும் யாகத்தில் கலந்து கொள்ளச் சென்றனர். தாட்சாயிணியும் அந்த யாகத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று இறைவனிடம் தன் ஆசையையைத் தெரிவித்தாள். அழையாத இடத்திற்குப் போனால் அவமானமே மிஞ்சும் என்ற ஈசனின் வார்த்தையைக் கேளாமல், தாட்சாயிணீ அங்கு சென்றாள். தக்ஷன் ஈசனைப் பழி வாங்கும் விதமாக தாட்சாயிணீயிடம் பாராமுகமாக நடந்து கொண்டதுடன், ஈசன் உடுத்தியிருக்கும் புலித்தோலாடை, பூசியிருக்கும் சாம்பல் ஆகியவற்றைப்பற்றி கேலி பேசினான்.

அபொழுது அங்கு கூடியிருந்த தேவர்கள் கலகலவென்று சிரித்தனர். முக்கியமாக சூரிய பகவான் பெருஞ்சிரிப்புச் சிரித்தார். அவமானம் தாங்காத தாட்சாயிணீ, தன்னுடைய யோக சக்தியால், அக்னியைத் தோற்றுவித்து அதில் தன் உடலைத் துறந்தாள். விஷயம் தெரிந்ததும் ஈசன் சினமுற்று, தன்னுடைய அம்சமான வீர பத்திரனைத் தோற்றுவித்தார். அவரை நோக்கி, "நீ யாக சாலைக்குச் சென்று, தேவியை அவமதித்தவரின் தலையைத் துண்டித்து எறிவதோடு, என்னை அவமதிக்கச் செய்யப்பட்ட அந்த யாகத்தற்கு வந்திருந்தவர்களையும் சரியான முறையில் தண்டிப்பாயாக" என்றார்.

யாக சாலைக்குச் சென்ற வீரபத்திரர் தேவர்களை நிலை குலையச் செய்தார். இந்திரன், வருணன், குபேரன் ஆகியோரை ஓட ஓட விரட்டி அடித்தார். சூரியனை நெருங்கிய வீரபத்திரர், " ஈசனைத் தக்ஷன் நிந்தித்த போது இந்த வாய்தானே சிரித்தது? " என்று கேட்டபடி ஓங்கி சூரிய பகவானின் கன்னத்தில் அறைந்தார். பொலபொலவென்று சூரியனின் பற்கள் கொட்டின. பிறகு பிரமன் ஓடி வந்து அனைவரையும் சமாதானம் செய்தார். பிறகு அனைவரும் ஈசனை வழிபட்டு, மன்னிக்குமாறு கோரினர்.

மனமகிழ்ந்த ஈசன் அனைவருக்கும் அருள் பாலித்தார். ஆனால் சூரியன் விஷயத்தில் மட்டும் அவர் கோபம் ஆறவே இல்லை. இழந்த பற்களைத் திரும்பப் பெறுமாறு அனுக்கிரகம் செய்யவில்லை! பல்லில்லாதவர் கடினமான உணவுப் பொருளைச் சாப்பிட முடியாதல்லவா? பொங்கல் என்றால் உண்பதற்கு எளிமையாக இருக்கும். அதனால்தான் சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்கிறார்கள்!

இந்தக் கதை நமக்கு ஒரு தத்துவத்தை உணர்த்துகிறது. யாராயிருந்தாலும், தவறு செய்தால் அதன் பலனை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்! யாரும் இதற்கு விதிவிலக்கல்ல!

ஜோதிடர். திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்.

KNOW ABOUT ASTRO-GAYATHRI

SERVICES OF ASTRO-GAYATHRI


Astrological predictions, Horoscope casting and matching for matrimony, NEWS and articles on Astrology

Designed and maintained by AKR Consultants